மண்ணின் மரங்கள்- உசிலை மரம்

உசிலை மரம்...
தமிழ்நாட்டில் பாரம்பரியமான மரங்களுள் ஒன்று உசிலை மரம்.
இதற்கு அரப்பு, கருவாகை, ஊஞ்ச, சீக்கிரி, துரிஞ்சில் என வேறு பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் அல்பீஸியா அமரா. இதை குளியலுக்காகவும், கேசப் பராமரிப்புக்காவும் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டில் காலங்காலமாக சீயக்காய்க்கு மாற்றாக உசிலை அரப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் இந்த மரமானது கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. உசிலை மரம் அதிக கிளைகளுடன் அடர்ந்து வளருவதால் நல்ல நிழல் தருவதாக உள்ளது. காற்றுத் தடுப்பானாகவும், மண் அரிமானத்தைத் தடுக்கும் மரமாகவும் உசிலை மரம் விளங்குகிறது. மக்கள் இம்மரத்தினை விறகாகவும் பயன்படுத்துகிறார்கள். 
     அரப்பு என்பது தமிழக மக்கள் தங்கள் தலையிலுள்ள அழுக்கை நீக்கப் பயன்படுத்தும் ஒரு பச்சை நிற குளியல் பொருளாகும்.        

இம்மரத்தின் இலையைக் காய வைத்து அரைத்துப் பெறுவதால் அரைப்பு என்று சொல்லி, அது அரப்பு என்று மருவியிருக்கலாம்.

உசிலை மரத்தின் இலை, பூக்களானது தீக்காயங்கள் மற்றும் புண்களைக் குணப்படுத்தவும் பயன்படுகின்றன. இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகவும், மண்ணுக்கு சிறந்த தழைச்சத்து உரமாகவும் பயன்படுகிறது. 

பொடுகு தொல்லையால் அவதிக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கு உசிலை மரத்தின் இலைகள் வரப்பிரசாதம். இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அரப்பு மோர் கரைசல் இம்மரத்தின் இலைகளிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இதில் ஜிப்ராலிக் அமிலம் உள்ளது. இது சிறந்த வளர்ச்சி ஊக்கி என்பதால், இந்தக் கரைசல் தெளித்த பயிர்களின் வளர்ச்சி அமோகமாக இருக்கும். பூக்கள் பிடிக்கும் சமயத்தில் இதைத் தெளித்தால் அதிகப் பூக்கள் பிடிக்கும்.
 மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உசிலை மரங்கள் அதிகமாகக் காணப்பட்டன. அதன் காரணமாகவே உசிலம்பட்டி என்று அந்த ஊருக்குப் பெயர் உருவாகியது.  

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்