ஆக்சிஜனேற்றம் பற்றி...

ஆக்சிசனேற்ற நிலை (oxidation state) சில நேரங்களில் ஆக்சிசனேற்ற எண் எனவும் குறிப்பிடப்படுகிறது, ஒரு வேதியியல் சேர்மத்தில் ஒரு அணுவின் ஆக்சிசனேற்றத்தின் அளவை அதாவது எலக்ட்ரான்களின் இழப்பை ஆக்சிசனேற்ற நிலை அளவு அல்லது ஆக்சிசனேற்ற எண் விவரிக்கிறது. கருத்தியல் ரீதியாக ஆக்சிசனேற்ற எண் நேர்மறை , எதிர்மறை அல்லது பூச்சியமாக இருக்கும். வெவ்வேறு தனிமங்களின் அணுக்களுக்கான அனைத்து பிணைப்புகளும் ஒரு சகப்பிணைப்பும் இல்லாமல் 100% அயனியாக இருந்தால், ஓர் அணுவிற்கு இருக்கும் கற்பனையான மின்சுமை ஆக்சிசனேற்ற நிலை ஆகும். உண்மையான பிணைப்புகளுக்கு இது ஒருபோதும் சரியாக இருக்காது.ஆக்சிசனேற்றம் என்ற சொல்லை அன்டோயின் இலவாய்சியர் என்ற பிரான்சிய வேதியியலாளர் முதன் முதலில் ஆக்சிசனுடன் ஒரு பொருளின் வினையைக் குறிக்கவே பயன்படுத்தினார். ஒரு பொருள் ஆக்சிசனேற்றப்பட்டவுடன், எலக்ட்ரான்களை இழக்கிறது என்ற உண்மை நீண்ட காலத்திற்குப் பின்னரே உணரப்பட்டது. எனவே ஆக்சிசனேற்ற நிலை என்பதை உணர்த்தும் பொருளுக்கான வரையறை மேலும் நீட்டிக்கப்பட்டது. எந்தெந்த வினைகளில் எலக்ட்ரான் இழக்கப்படுகிறதோ அவையெல்லாம் இவ்வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன. அவ்வினைகளில் ஆக்சிசன் சம்பந்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது இங்கு பொருட்படுத்தப்படுவதில்லை. ஆக்சிசனேற்ற நிலைகள் பொதுவாக முழு எண்களாகக் குறிக்கப்படுகின்றன. அவை நேர்மறை, எதிர்மறை, பூச்சியம் இவற்றில் ஒன்றாக இருக்கலாம், சில சந்தர்ப்பங்களில் ஒரு தனிமத்தின் சராசரி ஆக்சிசனேற்ற நிலை ஒரு பின்னமாகவும் உள்ளது எடுத்துக்காட்டாக மேக்னடைட்டில் (Fe3O4) இரும்பின் ஆக்சிசனேற்ற நிலை 8/3 என்ற பின்னமாகும். அறியப்பட்ட மிக அதிகமான ஆக்சிசனேற்ற நிலை +9 எனக் கூறப்படுகிறது[1]. டெட்ராக்சோயிருடியம்(IX) நேர்மின் அயனியில் (IrO+4) இத்தகைய அதிகபட்ச ஆக்சிசனேற்ற நிலை அறியப்பட்டது. +10 என்ற ஆக்சிசனேற்ற நிலையும் டெட்ராக்சோபிளாட்டினம்(X) நேர்மின் அயனியில் (PtO2+4) பிளாட்டினம் இருக்கமுடியும் என முன்கணிக்கப்பட்டது[2]. அறியப்பட்ட மிகக் குறைந்த ஆக்சிசனேற்ற நிலை -4 ஆகும். மீத்தேனில் இருக்கும் கார்பன் அல்லது [Cr(CO)4]4−. வில் இருக்கும் குரோமியம் −4 என்பது குறைந்தபட்ச ஆக்சிசனேற்ற நிலைக்கு எடுத்துக்காடாகும்[3].

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்